Friday, 25 July 2014



சர்வ சத்துகள் நிறைந்த கொய்யா பழம் 

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில்
வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், 
தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள்
கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது
உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும்,
குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம்
வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி
கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும்
இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம்
புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக்
கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால்
அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும்
உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப்
போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.
கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு
பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும்
பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து
இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு
கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம்
பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி
சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல்
வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட
நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது
அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை
பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து
தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும்
கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட
பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை
சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை
சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை
உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு
மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை
சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி
உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால்
பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா!

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். கொய்யாவில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன.

இது யாருக்கும் தெரிவதில்லை. கொய்யா மலிவான விலையில் கிடைப்பதால் அதன் மகத்துவத்தை யாரும் உணர்வதில்லை. உண்மையில் கொய்யாப்பழம் விலை உயர்ந்த ஆப்பிளை விட கூடுதல் சக்தியும், ஆரோக்கியமும் கொண்டது.

இரத்தத்தை  சுத்தப்படுத்தும் அவரைக்காய் 

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.
நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

உடலுக்கு வலிமை:

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

ரத்தத்தை சுத்தமாக்கும்:

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

நீரிழிவை குணமாக்கும்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.
மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்.

சரும நோய்களை குணமாக்கும்:

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

பீட்ரூட் காய்கனிகளில் ஒரு சகலகலா வல்லவன் 

பீட்ரூட் காய், கீரை, ஜூஸ் என பீட்ரூடின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை. பீட்ரூட் என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது ஆகும்.
பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் :

நைட்ரேட்டுகளின் தலை சிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்விரண்டு கூறுகளும் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ரத்த அழுத்தத்தை குறைக்க வும் உதவுகின்றன. தினமும் 500 கிராம் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் ரத்த அழுத்தத்தை சுமார் 6 மணி நேரத்திலேயே குறைத்து விடலாம்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும் :

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் ஆகியவற்றை அபரிமிதமான அளவுகளில் கொண்டிருப்பதாக அறியப்படுவதாகும். பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.

இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்ஸிடேஷனுக்கு உதவுவ தோடு, ரத்த நாளங்களின் சுவர்களில் அது படியாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது :

பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும். ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக் குழந்தையைப் பாதுகாக்க வல்லது.

அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம். மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.

எலும்புருக்கி நோயை எதிர்க்கும் :

பீட்ரூட்டில் நிரம்பியுள்ள சிலிகா, உடல் தனக்குத் தேவையான கால்சியம் சத்தை சிறப்பாக உபயோகித்துக் கொள்ள உதவும் மிக அவசியமான ஒரு தாதுப்பொருளாகும். பொதுவாக எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. எனவே, தினந்தோறும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகி வந்தால், எலும்புருக்கி மற்றும் எலும்புச் சிதைவு நோய்களை அண்ட விடாமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும் :

சர்க்கரை நோயாளிகள் அனைவரும், தங்களின் இனிப்பு சாப்பிடும் வேட்கையை, சிறிது பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் தணித்துக் கொள்ளலாம். இது கொழுப்புச்சத்து அற்றதாக, குறைவான மாவுச்சத்துடன் கூடியதாக, நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக் ஸைக் கொண்டதாக இருப்பினும், இதில் சர்க்கரை சத்து இருப்பதனால், மருத்துவர்கள் இதனை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறார்கள்.

ரத்தசோகையை குணமாக்கும் :

பீட்ரூட்டில் அபரிமிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவக்கூடியதான ஹீமோக்ளூட்டினின் என்ற திரவத்தின் உருவாக்கத்துக்கு உதவக்கூடியதாகும். ரத்த சோகையை குணமாக்க உதவுவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து தானேயொழிய அதன் நிறமல்ல.

உடல் சோர்விலிருந்து நிவாரணம் பெற உதவும் :

பீட்ரூட் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியது. அதன் நைட்ரேட் உட்பொருள், ஒருவரின் ரத்த நாளங்களை விரிவாக்கி, பிராணவாயு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான முறையில் சென்றடைய உதவி புரிந்து, அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. பீட்ரூட்டில் இரும்புச்சத்து செறிந்திருப்பதால், அது ஒருவரின் சகிக்கும் தன்மையை மேம்படுத்துகிறது.

பாலியல் நலம் மற்றும் சகிக்கும் தன்மையை மேம்படுத்தும் :

"இயற்கையான வயாக்ரா'' என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் :

பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.

தேக மினு மினுப்பு தோற்றப் பொலிவுக்கு தேவை தேங்காய் எண்ணெய்.

தென்னை மரம் என்றாலே அது பல வகைகளில் மனிதனுக்கு உபயோகமாக உள்ளது.

அதிலும் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய் மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.

தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.

தேங்காயில் உள்ள "பேட்டி ஆசிட் " (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.உடல் எடையைக் குறைகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதலாவதாக, அல்ஸைமர்ஸ் (alzheimers) எனப்படும் வியாதி. இது பெரும்பாலும் வயதானவர்களை தாக்கும். இந்த நோய்கண்டவர்கள் தினமும் நான்கு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து, தேங்காய் எண்ணெயின் பயன்பாடு இருதய நோயைக் குறைக்கும் ஒரு வழியாகவும் இருக்கின்றது. அதை உட்கொள்வது உடலின் (metabolism)த்தை அதிகரித்து உடல் பருமன் குறைந்திட உதவுகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப் போக்குக்கு,தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.வெள்ளைப் படுதலுக்கு தென்னம் பூ மாருந்தாக பயன்படுத்தப்படுகிறது.தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கோடு பெருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.


 இலந்தை பழத்தின் பயன்கள் 

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.
பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.