Thursday, 31 July 2014


தேவையற்ற சதையை குறைக்கும் சோம்பு நீர் 

இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

முழு உடலுக்குமான எளிய உடற்பயிற்சிகள் 

உடற்பயிற்சி என்றால் வேர்க்க விறுவிறுக்க செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உடல் ஓரளவுக்கு வலியில்லாமல் இருக்க சில எளிய உடற்பயிற்சிகளை கடைபிடிக்கலாம்.
ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 முறை அள‌விற்கு செய்ய‌லாம். நன்கு பழகிய பின்பு படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகாரிக்கலாம்.

கைக‌ளுக்குக்கான உட‌ற்ப‌யிற்சியில் இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌ வேண்டும். இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து.

தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழும்பலாம். எல்லாம் ஒரு 5 முறை என்ற அள‌விற்கு செய்ய‌லாம். இது மூட்டு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

இடுப்பில் கை வைத்து கொண்டு நேராக‌ நின்று கொண்டு இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம். இது இடுப்பு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி. த‌லையை ம‌ட்டும் மேலும் கீழும், இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம், இது க‌ழுத்து நல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்கள் அப்ப‌டியே ஒரே மூச்சாக வேலை செய்யாம‌ல் இப்ப‌டி சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிற்சிக‌ளை செய்து கொண்டே வீட்டு வேலையை செய்ய‌லாம்.

துணி துவைக்க கூட அடித்து துவைக்க எதிரில் கல் இருக்கும். துணி துவைக்க‌ வாஷிங் மிஷின் தான் ஆனால் சில‌ டோர் மேட்க‌ளை கையில் தான் துவைக்க‌ வேண்டி வ‌ரும், அதை ந‌ல்ல‌ சோப்பு த‌ண்ணீரில் ஊற‌வைத்து விட்டு கீழே போட்டு நாலு மிதி மிதிச்சா அழுக்கும் போகும் கால் வ‌லிக்கும் ஒரு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சியாகுது.

குழந்தைகளை குளிக்க வைக்க கூட குறுக்கு வலிக்க குனிந்து குளிக்க வைக்காமல் கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்கவைக்கலாம்.

கணனி முன்பு அரைமணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சேரில் உட்கார்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

இரவு தூங்க போகும் போதும், காலை எழும்பும் போதும் கூட உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும். இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும்.

ஒல்லியானவர்களுக்கும்  உடற்பயிற்சி தேவை 

உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்களைக் குறிக்கும், உழைப்பின் மூலம் பெறும் பயிற்சியோடு உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும், உழைப்பின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் பயிற்சி பெறும் என்று கூற முடியாது.

குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்பவர்களுக்கு அந்த வேலையைச் செய்யும் உறுப்புகள் தவிர ஏனைய உறுப்புகளுக்குப் போதுமான அளவு பயிற்சி கிடைக்காது, அந்தக் குறையைப் போக்க உடற்பயிற்சி தேவைப்படுகிறது. அனைத்து உறுப்புகளும் நன்றாகச் செயல் பட்டால்தான் ஆரோக்கியமாக வாழமுடியும். ஆகவே, உடற்பயிற்சி கொடுக்க இப்போது பல கருவிகள் வந்துள்ளன.

அவற்றைப் பயன்படுத்தி உடல் நலம் பெறலாம் ஒல்லியாய் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை எனும் மனநிலையில் இருப்பார்கள் அவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டுமெனில் நிச்சயமாக உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று லண்டனின் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஓடுவதும், உடல் வியர்க்க உடற்பயிற்சி செய்வதும் குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றும், ஒல்லியாக இருப்பவர்கள் வரம் வாங்கியவர்கள் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் எனும் கருத்து பரவலாக உள்ளது.

அந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி. ஆரோக்கியமான வாழ்க்கை என்பதும் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமல்ல என்றும், சரியான உடற்பயிற்சி செய்யாத ஒல்லியான மனிதருக்கும் குண்டான மனிதருக்கு வர வாய்ப்புள்ள அத்தனை பிரச்சனைகளும் வரும் என்றும் அந்த ஆராய்ச்சி பயமுறுத்துகிறது. உடலிலுள்ள கொழுப்பை சரியான அளவுக்குள் வைத்திருக்க இந்த உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை.

அதே நேரத்தில் நல்ல இரத்த ஓட்டத்திற்கும், சுறுசுறுப்புக்கும் கூட உடற்பயிற்சிகளே துணை செய்கின்றன.

தினமும் முப்பது நிமிடங்கள் எனும் அளவில் வாரம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதை ஒல்லியானவர்களும் கடைபிடிப்பதே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்தது என அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.