Sunday, 28 February 2016

எலும்புகளை பலப்படுத்தும் மங்குஸ்தான் பழம்

எலும்புகளை பலப் படுத்தக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி இன்று பார்ப்போம்:மங்குஸ்தான் பழம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். மிகவும் சதைப்பற்றுள்ள இந்த பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக இந்த பழம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது. மங்குஸ்தான் பழம், கற்கண்டு அல்லது சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மங்குஸ்தான் பழத்தில் உள்ள சதைப்பகுதியை எடுத்துக் கொண்டு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து ஒரு பாகாக காய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்சீனியா மங்குஸ்தானா என்று இந்த பழம் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.இந்த பழம் எலும்புகள் பலவீனம், எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு மங்குஸ்தான் ஒரு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. வயதானவர்களுக்கு முழங்காலுக்கு கீழே ஏற்படும் பலவீனத்தை பலப்படுத்துவதற்கு மங்குஸ்தான் உதவி செய்கிறது.

இவ்வாறு மங்குஸ்தான் பழம் மற்றும் கற்கண்டை சேர்த்து செய்த பாகை அன்றாடம் குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் பற்கள், எலும்புகள் ஆகியவை பலம் பெற உதவுகிறது. இந்த பழத்தின் மூலமாக போதுமான அளவு கால்சியம் சத்து குழந்தைகளுக்கு கிடைப்பதன் மூலமாக பற்கள், எலும்புகள் மட்டுமின்றி மூளை வளர்ச்சியும் போதிய அளவுக்கு வருவதற்கு மங்குஸ்தான் உதவுகிறது. அதே போல் மங்குஸ்தான் பழத்தை பெரியவர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் வயது முதிர்வை தவிர்க்க கூடிய தன்மையை உடலுக்கு மங்குஸ்தான் கொடுக்கிறது. உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கும் தன்மையும் மங்குஸ்தானுக்கு உள்ளது. மங்குஸ்தான் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவு இருப்பதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மங்குஸ்தான் பழத்தில் ஓடுகளுக்கும் மருத்துவ குணம் உள்ளது. பழத்தின் ஓட்டை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கக் கூடிய மருந்தை இதில் இருந்து தயாரிக்கலாம்.

பழ ஓடு, லவங்க பட்டை, ஓட்டை அரைத்து அதன் பொடியை பட்டையுடன் சேர்க்க வேண்டும். இவற்றை சுமார் 10 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து இதை ஒரு காஷாயமாக காய்ச்ச வேண்டும். பின்னர் இந்த கஷாயத்துடன் சிறிது தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.மங்குஸ்தான் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தாகவும் விளங்குகிறது. உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் சக்தியும் மங்குஸ்தானுக்கு உள்ளது. இதனால் உடலை நன்றாக வலுப்படுத்த உதவுகிறது. வெள்ளை போக்கை தடுக்க கூடியதாகவும் மங்குஸ்தான் விளங்குகிறது. மூலத்திற்கும் மருந்தாக மங்குஸ்தான் உதவுகிறது. மேலும் ஓட்டை பயன்படுத்தி தோல் நோய்க்கான மருந்தையும் உருவாக்கலாம். ஓட்டை பொடி செய்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். தோலில் உள்ள பூஞ்சைகளை நீக்கும் சக்தி கொண்டதாக மங்குஸ்தான் விளங்குவதால் தோல் நோய் போன்றவையும் நீங்குகின்றன. அரிப்பு, படை, சொறி, சிரங்கு போன்றவற்றை இந்த கலவை எண்ணெய்யை பூசுவதால் அதை கட்டுப்படுத்துகிறது. இதை தினமும் பயன்படுத்துவால் அரிப்பு, தடிப்பு போன்றவை படிப்படியாக குறையும்.