அதிகரித்திருக்கிறது. எந்த உணவையுமே தரமான, சுத்தமான, சுகாதாரமான இடங்களில் வாங்கி உண்பதில் ஆபத்தில்லை. இப்போது காலிஃபிளவர், காளான் உணவுகள், தள்ளு வண்டிகளிலும் நடைபாதைக் கடைகளிலும் சின்னச்சின்ன கடைகளிலும்கூட மலிவாகக் கிடைக்கின்றன.
இரண்டுமே முறையாக சுத்தப்படுத்திய பிறகே சமைக்கப்பட வேண்டியவை. அதிலும் காளானை சரியாக சுத்தப்படுத்தாவிட்டாலோ, நஞ்சான பிறகு சமைத்தாலோ உண்பவரின் உயிரையே பறித்துவிடும் அளவுக்கு ஆபத்தானது என்பது பலருக்கும் புரிவதில்லை. அது மட்டுமின்றி, காளான் என்கிற பெயரில் மைதாவையும் முட்டைக்கோஸையும் கலந்து, செயற்கை நிறமேற்றி, பலமுறை உபயோகித்த அதே எண்ணெயில் பொரித்து, கிட்டத்தட்ட காளானைப் போன்ற சுவையில் விற்கிற அநியாயங்களும் நடக்கவே செய்கின்றன!
‘‘கெட்டுப் போன காளானும் சரி, மைதாவில் தயாராகும் போலிக் காளான்களும் சரி எல்லோருடைய உடலுக்கும் ஆபத்தானவையே’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரேவதி ராணி. காளான் பிரியர்களுக்கு அவர் சொல்கிற தகவல்கள் அதிர்ச்சியையும் விழிப்புணர்வையும்தருபவை.
‘‘காளான் என்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அதை சாப்பிடும் விதம் முக்கியமானது. தள்ளுவண்டியில் விற்பனையாகும் எல்லா உணவுகளும் நமக்கு சுவையாகத்தான் தெரியும்... சில மணி நேரம் அல்லது சில நாட்கள் கழித்துதான் அவற்றின் தீமை புரியும். உணவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் காளானை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், காளானுக்குப் பதிலாக, முட்டைக்கோஸ் சேர்த்து செய்யப்படுகிற இது போன்ற உணவுகளை சிறுநீரகக்கல் அடைப்பு பிரச்னை உள்ளவர்கள், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோர், தைராய்டு நோயாளிகள் போன்றோர் எடுத்துக் கொண்டால் அதன் பக்க விளைவுகள் ஏராளம்.100 கிராம் பச்சைக் காளா னில் 98 கிலோ கலோரி, 3.6 கிராம் புரோட்டீன், 3.6 கிராம் கார்போஹைட்ரேட், 2.5 கிராம் நார்ச்சத்து, 30.5 மி.கி. பொட்டாசியம் ஆகியவை உள்ளன. கொழுப்புச் சத்து கிடையாது. பொதுவாக காளான் நீரிழிவுக்காரர்களுக்கு நல்லது. அந்த நம்பிக்கையில் பலரும் இத்தகைய உணவுகளை வாங்கி உண்பார்கள்.
ஆனால், காளானே சேர்க்காமல் மைதா வில் தயாராகும் இந்த உணவுகள் அவர்களது ரத்த சர்க்கரை அளவை எக்குத்தப்பாக அதிகரிக்கச் செய்வதுடன் தொடர்ந்து உண்ணும் பட்சத்தில் இதயம், சிறுநீரகங்கள் போன்றவற்றையும் பெரிதும் பாதிக்கும்.
காளானைக் கழுவும் முறை...
காளானில் அதிக நார்ச்சத்து உள்ளதால் சீக்கிரமே அதிகத் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். அதனால் கீரையை அலசுவது போல ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சீக்கிரமாக அலசி எடுக்க வேண்டும். மேல் பாகத்தில் கருப்பாக, சின்னதாக ஒட்டிக் கொண்டிருக்கும் பகுதி தண்ணீருடன் வந்து விடும்.
இரண்டு முறை அலசலாம். தண்ணீரில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து அலசி னால், சீக்கிரம் கருக்காமல் இருக்கும். அலசியதும்
ஒரு துணியின் மீது பரப்பி, அதிகப்படியான ஈரம் அதில் உறிஞ்சப்படும்படி சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இப்படிச் செய்யாவிட்டால், சமைக்கும் போது அதிலுள்ள அதிகப்படியான தண்ணீர் வெளியே வரும்.
பாக்கெட்டில் வரும் காளான்களை 3 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். ஃப்ரீசரில் வைக்கக் கூடாது. பாக்கெட்டை திறந்து வைத்தால் காளான் கருத்து விடும். இறுக்கமான டப்பாவில் போட்டு மூடி வைத்து உபயோகிக்கலாம். லேசாக நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாகி விட்டால் உபயோகிக்கக் கூடாது.
காளான் ஏன் நல்லது?
காளான் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தமும் ரத்த நாளங்களின் உள்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பும் தடுக்கப்படுகிறது.காளானில் உள்ள எரிட்டினைன், கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்தில் இருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.
இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு சீராக இயங்குகிறது. மூட்டுவாதம், கருப்பை நோய்கள், குழந்தையின்மைப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் காளான் நல்ல மருந்து.
தினமும் காளான் சூப் குடித்தால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைவதாகச் சொல்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.
மேலும், காளானில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து உண்டு என்பதால் சமையலுக்கு அதிகப்படியான எண்ணெய் தேவைப்படுவதில்லை. கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு, உடல் மெலிந்தோருக்கு தினமும் காளான் சூப் கொடுத்தால் உடல் தேறும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
எந்த காளானில் என்ன பிரச்னை?
காளான்களில் இயற்கையாக விளைபவை, செயற்கையாக விளைவிக்கப்படுபவை என இரண்டு உண்டு. இயற்கையாக விளைவதில் எல்லாவற்றையும் உட்கொள்ள முடியாது. செயற்கையாக விளைவிக்கிற காளான்களில், சிப்பிக் காளான் மற்றும் பால் காளான்கள் பலராலும் விரும்பி உண்ணப்படுகின்றன. காளான் ஒரே ஒரு செல்லினால் ஆன தாவரம். அதனால் நிறைய நன்மைகள் உள்ளதைப் போலவே தீமைகளுக்கும் பஞ்சமில்லை. ஈஸ்ட் காளான், தொண்டை மற்றும் வாயில் கொப்புளங்களை ஏற்படுத்தும்.
வயிற்றுவலியால் துடித்துக் கொண்டு மருத்துவரிடம் ஓடி வரும் பல நோயாளிகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அவர்கள் தள்ளு வண்டியில் விற்ற உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட விளைவே நம்பர் 1 காரணமாக இருக்கிறது. அதிலும் மிக மிக ஜாக்கிரதையாக சுத்தம் செய்யப்பட்டு, நஞ்சாகும் முன்பே சமைக்கப்பட வேண்டிய காளான்களை, அப்படி எதுவுமே செய்யாமல் சமைக்கிற தள்ளுவண்டிக் கடைகளிலும் நடைபாதைக் கடைகளிலும் வாங்கி உண்பவர்களுக்கு பயங்கரமான பாதிப்புகள் வருவது நிச்சயம். நச்சுத்தன்மை அடைந்த காளானை உண்டால் இறப்புகூட நிகழலாம்.
நஞ்சாகும் காளான்களை அடையாளம் காண்பது எப்படி?
நச்சுத்தன்மை கொண்ட காளான்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், மிகவும் அதிக நச்சுத்தன்மை கொண்ட அமானிட்டா இனத்தைச் சேர்ந்த பலவகைக் காளான்கள் வெள்ளை நிறத்திலேயே காணப்படுகின்றன
.
பூச்சிகளும் விலங்குகளும் நச்சுக் காளான் களை ஒதுக்கும். அமானிட்டா ஃபாலாயிட்ஸ் வகை காளான்களுக்கு ‘இறப்புக் குப்பி’என்றே பெயர். இறப்பை ஏற்படுத்தக்கூடிய அதில் புழு, பூச்சிகள்கூட இருக்கும். இந்த காளான்கள் சுவையாக இருக்காது.
உண்ணக்கூடாத சில வகை காளான்களை பக்குவமாக சமைத்தபின், அவற்றில் உள்ள தீய விஷயங்கள் குறையும் என்று சொல்லப்பட்டாலும் எல்லா நச்சுப் பொருட்களையும் அந்த வகையில் நீக்கிவிட முடியும் என்று சொல்வதற்கில்லை. உதாரணத்துக்கு காளான்களில் உள்ள மைக்கோடாக்சின் என்ற நச்சுப்பொருள் வெப்பத்தினால் அழிவதில்லை. எனவே, சமைப்பதன் மூலம் அதன் நச்சுத் தன்மையை நீக்கி விட முடியாது.
நச்சுத்தன்மை கொண்ட காளான்களை அரிசியோடு சேர்த்து வேக வைத்தால், அரிசியின் நிறம் சிவப்பாகும். நறுக்கிய வெங்காயத் துண்டுகளுடன் சேர்த்துப் பிசையும் போது ஊதா நிறம் பெறும்.
காளான் பிரியர்களே...
வெளியிடங்களில் காளான் உணவுகள் வாங்கிச் சாப்பிடும் போது மிகுந்த கவனம் தேவை. சுத்தமும் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ள நடைபாதைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், சின்னச் சின்ன ஓட்டல்கள் போன்றவற்றில் காளான் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மிக முக்கியமாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கவே வேண்டாம்...’’
No comments:
Post a Comment