Sunday, 28 February 2016

எலும்புகளை பலப்படுத்தும் மங்குஸ்தான் பழம்

எலும்புகளை பலப் படுத்தக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி இன்று பார்ப்போம்:மங்குஸ்தான் பழம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். மிகவும் சதைப்பற்றுள்ள இந்த பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக இந்த பழம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது. மங்குஸ்தான் பழம், கற்கண்டு அல்லது சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மங்குஸ்தான் பழத்தில் உள்ள சதைப்பகுதியை எடுத்துக் கொண்டு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து ஒரு பாகாக காய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்சீனியா மங்குஸ்தானா என்று இந்த பழம் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.இந்த பழம் எலும்புகள் பலவீனம், எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு மங்குஸ்தான் ஒரு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. வயதானவர்களுக்கு முழங்காலுக்கு கீழே ஏற்படும் பலவீனத்தை பலப்படுத்துவதற்கு மங்குஸ்தான் உதவி செய்கிறது.

இவ்வாறு மங்குஸ்தான் பழம் மற்றும் கற்கண்டை சேர்த்து செய்த பாகை அன்றாடம் குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் பற்கள், எலும்புகள் ஆகியவை பலம் பெற உதவுகிறது. இந்த பழத்தின் மூலமாக போதுமான அளவு கால்சியம் சத்து குழந்தைகளுக்கு கிடைப்பதன் மூலமாக பற்கள், எலும்புகள் மட்டுமின்றி மூளை வளர்ச்சியும் போதிய அளவுக்கு வருவதற்கு மங்குஸ்தான் உதவுகிறது. அதே போல் மங்குஸ்தான் பழத்தை பெரியவர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் வயது முதிர்வை தவிர்க்க கூடிய தன்மையை உடலுக்கு மங்குஸ்தான் கொடுக்கிறது. உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கும் தன்மையும் மங்குஸ்தானுக்கு உள்ளது. மங்குஸ்தான் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவு இருப்பதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மங்குஸ்தான் பழத்தில் ஓடுகளுக்கும் மருத்துவ குணம் உள்ளது. பழத்தின் ஓட்டை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கக் கூடிய மருந்தை இதில் இருந்து தயாரிக்கலாம்.

பழ ஓடு, லவங்க பட்டை, ஓட்டை அரைத்து அதன் பொடியை பட்டையுடன் சேர்க்க வேண்டும். இவற்றை சுமார் 10 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து இதை ஒரு காஷாயமாக காய்ச்ச வேண்டும். பின்னர் இந்த கஷாயத்துடன் சிறிது தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.மங்குஸ்தான் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தாகவும் விளங்குகிறது. உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் சக்தியும் மங்குஸ்தானுக்கு உள்ளது. இதனால் உடலை நன்றாக வலுப்படுத்த உதவுகிறது. வெள்ளை போக்கை தடுக்க கூடியதாகவும் மங்குஸ்தான் விளங்குகிறது. மூலத்திற்கும் மருந்தாக மங்குஸ்தான் உதவுகிறது. மேலும் ஓட்டை பயன்படுத்தி தோல் நோய்க்கான மருந்தையும் உருவாக்கலாம். ஓட்டை பொடி செய்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். தோலில் உள்ள பூஞ்சைகளை நீக்கும் சக்தி கொண்டதாக மங்குஸ்தான் விளங்குவதால் தோல் நோய் போன்றவையும் நீங்குகின்றன. அரிப்பு, படை, சொறி, சிரங்கு போன்றவற்றை இந்த கலவை எண்ணெய்யை பூசுவதால் அதை கட்டுப்படுத்துகிறது. இதை தினமும் பயன்படுத்துவால் அரிப்பு, தடிப்பு போன்றவை படிப்படியாக குறையும்.

Sunday, 14 February 2016

மாலை நேரத்தில் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகள்!!!

காலை, மதிய, இரவு உணவுகளை விட பல நேரங்களில் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. கலோரிகள் அதிகமான இவற்றை உண்ட பிறகு எந்த வேலையும் செய்யாமல் நாம் நேரடியாக உட்கார்ந்து வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம். இதனால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. இனி இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனி உணவுகள் பற்றி காணலாம்...

சமோசா

டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.

கச்சோரி

எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.

வடை, பஜ்ஜி

டீ, காப்பியின் உடன் பிறவா சகோதரர்கள் இந்த பஜ்ஜி, போண்டா, வடை போன்றவை. பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள்.

ஜிலேபி

சிலர் மட்டும் தான் இடைவேளையில் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.

வடா-பாவ்

மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றும் இதில் இருக்கிறது. எனவே, இதை கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது.

சேவா- பூந்தி

இது கூடவா உடலுக்கு கேடு என சிலர் கேட்கலாம். அளவாக இருக்கும் வரை அனைத்தும் அமிர்தம் தான் அளவை மீறும் போது தான் பிரச்சனை உடலில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

பானிப்பூரி

பானிப்பூரியில் இருக்கும் பிரச்சனையே விற்கப்படும் இடம் தான். இந்தியாவின் சுகாதாரமற்ற இடைவேளை உணவு இது தான். வீட்டில் சமைத்து சாப்பிடுவது பெரிதாய் உடலுக்கு எந்த பிரச்சனையும் தராது. சாலை ஓர கடைகளில் தொடர்ந்து இதை சாப்பிடுவது உடலுக்கு கேடு தான்.

Monday, 8 February 2016



தாய், சேய் நலன் தரும் யோகா

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் யோகா செய்வதால்  ரத்த ஒட்ம் அதிகரிக்கிறது மேலும் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீர்பிடிமானம் மற்றும் திரவக்கோர்வை பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

யோகா தொடர்ந்து செய்து வந்தால் மன கவலை, மன அழுத்தம் குறையும். யோகா செய்யும்போது நரம்பு மண்டலம் இயக்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் போது தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்பானது தூக்கத்தை தூண்டுகிறது. இதனால் பெண்கள் நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.

உடலையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு சிறந்த நிவாரணியாக செயல்படுவது யோகா. இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெற்றிகரமாக வெளியேற்றி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது, மேலும் யோகா தசைகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகப்படுகிறது. ..

பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து கர்ப்பிணிகளையும் தாக்குவது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இவை நம்மை நெருங்காமல் இருக்க யோகா பயிற்சி செய்துவரலாம், ஏனெனில் கர்ப்ப காலத்தில் கர்பிணிகளுக்கு  ஏற்படும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை யோகா தடுக்கிறது.

யோகா நரம்பு மண்டலத்தை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் உடல் நலம், மனநலம், மூச்சு பயிற்சி, ஹார்மோன்கள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுபடுத்துதல் போன்றவற்றிற்கும் யோகா உதவுகிறது..

எல்லா கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலியை எளிதாக அறிந்து கொள்ளமுடியும். இந்த பிரச்சனைக்கு யோகா பயிற்சி சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

யோகா பயிற்சி மூலம் இடுப்பு மற்றும் கால் பகுதிகள், முழுவதும் பல தசைநார்கள் இயக்கப்படுகிறது.. காலை நேரத்தில் மூச்சு பயிற்சி செய்தால் குமட்டல், காலை நோய் போன்றவை குறையும். யோகா வழக்கமான நடைமுறையில் பிரசவ வலியைத் தளர்த்துகிறது.

அதாவது யோகா செய்து வருவதன் மூலம் பிரசவத்தின் போது வயிற்று பகுதியில் தசைளை உறுதிப்படுத்தி குழந்தைகளை எளிய முறையில் குழந்தையை வெளியே தள்ளும் வேலையை செய்கிறது.. பிரசவத்தை மிகவும் சுலபமாக்குகிறது.

Wednesday, 3 February 2016

நமது உடல் நலத்தை பேணுவதற்கு நடை பயிற்சி, உடற்பயிற்சி அவசியம்:

குறைந்தது ஒரு வாரத்தில் 5 நாட்களுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மீதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். உதாரணமாக சுறுசுறுப்பான நடைபயிற்சிகள் செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டத்திலும் ஈடுபடலாம்.

நடைபயிற்சி செய்பவர்கள் தினமொன்றுக்கு 10,000 தடவைகள் அடியெடுத்து நடப்பது சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

நடைபயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிளோட்டம் என்பவற்றிலிருந்து நாம் வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாலேயே தொற்றா நோய்கள் எம்மை அணுகிக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் தூரம் கூட நடக்க விரும்பாதவர்கள் எம்மத்தியில் இல்லாமல் இல்லை.

உணவில் உப்பை அளவுக்கதிகமாக சேர்க்காமல் விடுவதை போன்று சீனியையும் ஒதுக்க வேண்டும். நீரிழிவு நோய் அல்லாத ஒருவர் நாளொன்றுக்கு 6 தேக்கரண்டி சீனியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பழவகைகள், காய்கறி வகைகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு 400 கிராம் பழங்களும் காய்கறி வகைகளும் எடுக்க வேண்டும்.

ஒருவரின் இரத்த அழுத்தம் 140 – 90க்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும்படி கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆண்டு தோறும் அல்லது மாதம் தோறும் இரத்த அழுத்தம் சோதித்து பார்த்துக் கொள்வது நல்லது.

எண்ணெய் கொழுப்புள்ள உணவு வகைகளை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக டிரான்ஸ் கொழுப்பு அதாவது உடலுக்கு ஒவ்வாத கொழுப்பு உள்ள உணவு வகைக ளைக் குறைக்க வேண்டும்.

வணிக ரீதியாக தயாரிக்கப்படுகின்ற சிற்றுண்டிகள், கேக் வகைகள், பேஸ்ட்ரி வகைகள், மாஜரின், மீளச்சூடாக்கிய எண்ணெய் வகைகளில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக காணப்படுகிறது.

இரவு உணவுக்காக பிரைட் ரைஸ் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை வழங்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பும் போது வேலைப்பளு, சோம்பேறித்தனம், நேரமின்மை காரணமாக பேஸ்ட்ரி போன்ற சிற்றுண்டிகளை பிள்ளைகளுக்கு கொடுக்க சில பெற்றோர் முற்படுகிறார்கள்.

சத்துள்ள உணவுகளை பிள்ளைகளுக்கு கொடுத்தாலும், சிற்றுண்டிகள் வாங்கித் தரும்படி அடம்பிடிக்கும் அளவுக்கு சிற்றுண்டி வகைகளுக்கு பிள்ளைகள் பழக்கப்பட்டு விட்டார்கள்.

இதே போன்று வேலைக்குச் செல்லும் ஆண் பெண் இருபாலாரும் பயணித்துக் கொண்டிருக்கும் போதே காலை உணவை சிற்றுண்டிகளுடன் முடித்துக் கொள்வதும் உண்டு. இவர்கள் தமது உடல் நிலை பற்றி கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

ஆரோக்கியத்துக்கு மற்றுமொரு முக்கிய காரணியாக இருப்பது மதுப்பழக்கமின்மையும், புகைப்பிடித்தல் பழக்கமின்மையுமே. புகைப்பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்துவதையும் தவிர்த்துக் கொள்ளல் எமக்கு மட்டுமல்ல எம்மைச் சார்ந்தோர்களுக்கும் சிறந்தது.

Tuesday, 2 February 2016

தொடர் பயிற்சி பலனை தரும்:

உடலில் அதிக கொழுப்பு தங்கும் இடம் வயிறு. நமது இலக்கு ஆரோக்கியமான அழகான வயிற்றுப்பகுதி என்பதை மனதில் கொண்டு பயிற்சிகள் செய்தால் தொப்பையின்றி ஆரோக்கியமாக இருக்கலாம். வயிற்றுக்காக பரிந்துரைக்கப்படும் இந்த பயிற்சிகளை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்தால் அழகான வயிறு நிச்சயம்.

அதிக கலோரிகளை சுலபமாக எரிக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் கார்டியோ பயிற்சிகள் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சியாக வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்றவற்றை செய்யலாம். பயிற்சிகளை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். விடாமல் தொடர்ந்து பயிற்சிகளை செய்தால் மட்டுமே முழுபலனையும் அடைய முடியும்.

அயன் மேன்:

தரையில் குப்புறப்படுக்க வேண்டும். கை முட்டிகளை மடித்து முழு உடல் எடையையும் முன் கையால் தாங்கும்படி படுக்க வேண்டும். இப்போது கால் கட்டை விரலை, தரையில் ஊன்றியபடி உடலை தூக்க வேண்டும். குறைந்தது 10 முதல் 15 விநாடிகள் அதே நிலையில் இருந்து விட்டு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இப்படி செய்யும் போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுப் பகுதி கொழுப்பு குறைவதுடன் வலிமை பெறும்.

சூப்பர் மேன்:

தரையில் முட்டி போட்டு கைகை தரையில் ஊன்ற வேண்டும். விலங்குகள் நான்கு காலில் நிற்பதை போல் இருக்க வேண்டும். இப்போது வலது கை, இடது காலை மட்டும் நன்கு நீட்ட வேண்டும். இப்போது இடது கை, வலது காலில் முழு உடலும் தாங்கி இருக்கும். இந்த நிலையில் 10 முதல் 20 விநாடிகள் இருக்க வேண்டும். இதோ போல் மறுபுறம் இடது கை, வலது காலுக்கு செய்ய வேண்டும்.  

கோப்ரா ஸ்ட்ரெச்:

தரையில் குப்புற படுக்க வேண்டும். கை மூட்டுகளை மடித்து தாடையில் அடியில் வைக்க வேண்டும். இந்தநிலையில் இருந்து இடுப்பு வரை உள்ள மேல் உடலை மேலே உயர்ந்த வேண்டும். 30 விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு பழைய நிலைக்கு வர வேண்டும்.

இந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் படிப்படியாக தொப்பை குறைவதை காணலாம்.